நேர்கொண்ட பார்வை டிரைலர் – அனல் பறக்கும் நீதிமன்றக் காட்சிகள்

விஸ்வாசம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு ஹிந்தியில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கப் போகிறார் என்றதும் பலரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித்தா என்று ஆச்சரியப்பட்டார்கள்.

பிங்க் படத்தைப் பார்க்காதவர்கள் இந்த நேர்கொண்ட பார்வை டிரைலரைப் பார்த்தால் அதிசயத்துடன்தான் பார்ப்பார்கள். நிதானமாக ஆரம்பிக்கும் டிரைலர் அப்படியே அழுத்தமாக நகர்ந்து வேகமெடுத்துப் பயணித்து கடைசியில் ஆக்ஷனில் வந்து பிரமிக்க வைக்கிறது.

அஜித் தான் நடிக்கும் படங்களில் அதிகமாக நடிக்க மாட்டார், மேலோட்டமாக நடித்துவிட்டுப் போய்விடுவார் என ஒரு விமர்சனம் பொதுவாக உண்டு. ஆனால், இந்தப் படம் அஜித்தின் நடிப்பைப் பற்றி அழுத்தமான பதிவை, பார்வையைக் கொடுக்கும் படமாக அமையும் என டிரைலரே சொல்லிவிடுகிறது.

சட்டவாளர் கதாபாத்திரம் என்றாலே வசனங்கள் சிறப்பாக இருக்கும். அதைப் பேசி நடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பது காலம் காலமாக இருக்கும் ஒன்று. அஜித் இவ்வளவு, அழுத்தம், திருத்தமாக அந்த சட்டவாளர் கதாபாத்திரத்திற்கு தன் பேச்சின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்.

அதிலும், “நீங்க கன்னித் தன்மையோட இருக்கீங்களா, இல்லையா” , “இப்படி நெறைய, நெறைய, நெறைய, நெறைய, நெறைய”, “ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டறதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்தறீங்க,” வசனங்களுக்கு தியேட்டர்களில் கைத்தட்டல் உறுதி என்பதை இந்த டிரைலரே உறுதிப்படுத்துகிறது.

டிரைலரின் முடிவில் ஒருத்தரை இரும்புத்தடியால் அடித்துவிட்டு அஜித் வெறித்துப் பார்க்க, லோ ஆங்கிள் டிராலியில் அவரை நோக்கி பாயும் காமரா, பின்னணியில் பச்சை நிற மரத்தில் ஒளிவெள்ளம், அஜித்தின் கருப்பு உடை, சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் அஜித் ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சி.

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தில் காட்சிக்குக் காட்சி அதிரடி புரியப் போகிறது என்பது இப்போதே தெரிந்துவிடுகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு, கோகுல் சந்திரன் படத் தொகுப்பு, கதிர் கலை இயக்கம் இந்தப் படத்தின் மிகப் பெரும் பக்கபலமாக இருக்கப் போகிறது.

அஜித்தின் படமாக இருந்தாலும், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பும் நிச்சயம் பேசப்படலாம். டிவி விவாதங்களில் அனல் தெறிக்கப் பேசும் ரங்கராஜ் பாண்டே, அஜித்தின் எதிர் சட்டவாளராக போட்டி போடுகிறார். டிரைலரின் ஒரே குறை வித்யா பாலனை ஒரு பிரேமில் கூட காட்டாததுதான்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் இன்னொரு முகத்தை, இன்னொரு பார்வையை இந்தப் படத்தில் காட்டப் போகிறார். அதைக் காண ஓகஸ்ட் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆண்களே... வாழ்வியல் நோய்களிலிருந்து தப்பிக்க உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்!

Thu Jun 13 , 2019
இந்தாண்டு நேரத்தை உருவாக்குங்கள்… நேரத்தை எடுங்கள் (Make the Time… Take the Time) என்ற செய்தியை முன்னிறுத்தி ‘சர்வதேச ஆண்கள் உடல்நல வாரம்’ அனுசரிக்கப்படுகிறது. உலக அளவில், தங்கள் உடல்நலன் மீது அக்கறை கொள்ளாத ஆண்கள் நிரம்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா, இலங்கையும் இடம் பெற்றிருக்கிறது. அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது முதல் புகை, மதுவென உடல்நலனுக்கு ஒவ்வாத விடயங்களை அளவில்லாமல் பயன்படுத்துவது வரை ஆண்கள் காட்டும் அலட்சியம், பெரிய […]