அலைபேசி கீழே விழுந்து உடைந்துவிட்டால் அதிகமாகச் செலவு வைக்கும் ஒரு விடயம் அதன் தொடுதிரைதான் (mobile display). அலைபேசியில் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது என்பதால் எளிதாக உடைபடுவதும் அதுதான். ஆனால், நன்றாகக் கவனித்துப் பார்த்தால் ஒன்று தெரியவரும். மற்ற கண்ணாடிகளைப் போல அலைபேசி தொடுதிரைக் கண்ணாடி கீழே விழுந்தவுடன் உடைவதில்லை.

பலமான தாக்குதலுக்கு உள்ளானால் மட்டுமே அதில் கீறல்களைப் பார்க்க முடியும். அப்படி அலைபேசியில் இருக்கும் கண்ணாடி உடையாமல் இருக்கக் காரணம் அதில் சாதாரண கண்ணாடி மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. வலுவூட்டப்பட்ட சிறப்புக் கண்ணாடிதான் அனைத்து அலைபேசிகளிலும் இருக்கிறது. அதுவே பாதுகாக்கிறது.
எதற்காக வலுவூட்டப்பட்ட கண்ணாடிகள் ?
மொபைலில் டிஸ்ப்ளேவின் அளவு சிறியதாக இருந்தவரை அதற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பழைய அலைபேசிகளை எடுத்துப்பார்த்தால் அதில் இருப்பது எல்லாமே சாதாரண பாலிகார்பனேட்தான் கண்ணாடிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் அதிதிறன் அலைபேசிகள் (Smart Mobile) பிரபலமாகத் தொடங்கி, டிஸ்பிளேயின் அளவும் அதிகரிக்கத் தொடங்கியது.
அப்போது பாலிகார்பனேட்டைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. காரணம் அதன் மூலமாக டிஸ்பிளேயில் தெரியும் காட்சிகளைத் தெளிவாகப் பார்க்க முடியாது. இருந்த ஒரே வழி கண்ணாடிகள்தான்.
ஆனால், அவற்றைப் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் இருந்தன. கண்ணாடிகள் எளிதில் உடையும் தன்மை கொண்டவை என்பதால், அதைப் பயன்படுத்த முடியவில்லை. அப்போதுதான் வலுவூட்டப்பட்ட கண்ணாடி சாதாரண கண்ணாடியின் இடத்தை நிரப்பியது. இவற்றுக்கு alkali aluminosilicate கண்ணாடி என்ற பெயரும் உண்டு.

இவை கீறல்கள் விழுவதைத் தடுப்பதுடன் எளிதாக உடையாத தன்மையும் கொண்டவை. இப்போது அனைத்து அதிதிறன் அலைபேசிகளிலும் வலுவூட்டப்பட்ட கண்ணாடியே இருக்கிறது. அப்படி இன்றைக்கு அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் சில வலுவூட்டப்பட்ட கண்ணாடிகள் இவை.
கொரில்லா கிளாஸ்
அமெரிக்க நிறுவனமான Corning Inc. இந்தக் கண்ணாடியைத் தயாரிக்கிறது. ஐம்பது வருடங்களாகக் கண்ணாடித் தயாரிப்பில் இருக்கும் இந்த நிறுவனம் 2005-க்குப் பிறகு அதிதிறன் அலைபேசிகளுக்கான வலுவூட்டப்பட்ட கண்ணாடியை உருவாக்க முடிவு செய்தது. அதை உருவாக்கிய பின்னர் அதற்குக் கொரில்லா கிளாஸ் (Gorilla Glass) என்று பெயரிட்டது. முதலில் பயன்படுத்தியது அப்பிள்தான். 2007-ம் ஆண்டு வெளியான தனது முதல் ஐபோனில் முதல் முறையாகக் கொரில்லா கிளாஸைப் பயன்படுத்தியது. அதன் பிறகு மற்ற நிறுவனங்களும் வாங்கிப் பயன்படுத்தின.

இன்றைக்குச் சந்தையில் பெரும்பான்மையான இடத்தை தனது கையில் வைத்திருக்கிறது கொரில்லா கிளாஸ். அனைத்து அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களுமே இதைப் பயன்படுத்துகின்றன. அலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான அளவுகளில் முற்பதிவு செய்து வாங்கிக்கொள்கிறார்கள்.
பல அலைபேசிகளில் டிஸ்பிளேக்கு மட்டுமல்ல பின்புறத்திலும் கண்ணாடியைப் பார்க்க முடியும். இது அலைபேசிக்கு ஒரு பிரீமியம் லுக்கை கொடுக்கிறது. அதில் பயன்படுத்தப்படுவதும் கொரில்லா கிளாஸ்தான். இறுதியாகக் கொரில்லா கிளாஸ் 6 வெளியிடப்பட்டது. இதுவே இப்போது பல பிரீமியம் பட்ஜெட் செக்மென்ட் அலைபேசிகளில் பயன்படுத்தப்படுகிறது.
டிராகன் ப்ரெயிலை
இந்தக் கண்ணாடியை Asahi Glass என்ற ஜப்பானிய நிறுவனம் தயாரிக்கிறது. 2011-ம் ஆண்டில் வெளியான டிராகன்ரெயில் கண்ணாடியைக் கொரில்லா கிளாஸுக்கு மாற்றாகவே அனைவரும் பார்த்தார்கள். சாம்சங், ஷியோமி, சொனி எனப் பல நிறுவனங்களின் ஆரம்பக்கால அலைபேசிகளில் இதைப் பார்க்க முடியும்.

ஆனால், கடந்த சில வருடங்களாகவே இதைப் பயன்படுத்தும் அலைபேசிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இப்போது ஒரு சில அலைபேசிகளில் மட்டுமே டிராகன் ப்ரெயிலை (Dragontrail) பார்க்க முடிகிறது. குறிப்பாகக் கூகுள் நிறுவனம் pixel 3a xl அலைபேசிகளில் இதைப் பயன்படுத்தியிருக்கிறது.
சப்பயர் கிளாஸ்
மேலே இருக்கும் இரண்டு கண்ணாடிகளுடன் ஒப்பிடுகையில் இருப்பதிலேயே மிக வலுவானது இதுதான். செயற்கையாக உருவாக்கப்பட்ட நீலக்கல்லால் Sapphire Glass தயாரிக்கப்படுகிறது. இதைப் பல நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த GTAT Advanced Technologies என்ற நிறுவனம் இதைத் தயாரிக்கிறது.

கீறல்கள் விழுவதை முற்றிலுமாகத் தடுக்கும். இது வளையும் தன்மையை மிகக் குறைவாகவே கொண்டுள்ளது. இதன் விலையும் அதிகமாக இருப்பதால் பல நிறுவனங்கள் அலைபேசிகளில் இதைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டன. அப்பிள் அதன் வோட்ச்களில் Sapphire Glass பயன்படுத்துகிறது.